கூடையில் பொத்தி வைத்துக் கொண்டு வந்து
கண் மறைவாக விடப்பட்ட
பெட்டை நாய்க்குட்டிகளைப் போல
ஈரம் கவிந்த விழிகளோடு
கோயில் வாசலில் நான்...
கடந்து போனாய்...
பின் பல நாட்கள்
நிழற்குடையற்ற பேருந்து நிறுத்தத்தில்
வெயிலைத் தின்று நின்றுருக்கிறேன்
ஆகச்சிறந்த கணங்களை எதிர்பார்த்து..
வருகை சலனமின்றி
தோழிகளிடம்
அல்ஜிப்ரா, ஆம்பியாக்சஸ், எலியின் குடல்
பாகைமணி உடைந்த கதைகளை
பகிர்ந்தபடி பேருந்தில் ஏறிப்போனாய்
பின்னொரு நாள்
பரமேஸ்வரியின் தங்கையின்
மஞ்சள் நீராட்டில்
நான் பரிமாறிய கேசரி மட்டும்
சாப்பிடாமலேயே ஒதுக்கப்பட்டிருந்தது
தற்செயல்கள்
தற்செயலாக நடப்பதில்லை
எனக்கும் உனக்கும் இடையில்
காதலைச் சொல்லிவிட்டதென்ன
பெருங்குற்றமா
பிடிக்கவில்லை என்றாவது சொல்
பேசித்தொலைத்தாயென்ற நிம்மதியில்
நிராகரிப்பின் வலியை உருவாக்கி
கதவை அறைந்து சாத்திவிட்டு
அழுவதற்கு ஏதுவாக இருக்கும்...
No comments:
Post a Comment